தமிழகத்தில் மீனவர்களுக்கு அவர்கள் படகுக்கு தேவைப்படும் டீசலை வரி விலக்கு அடிப்படையில் தமிழக அரசு வழங்கி வருகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மீன்பிடி தொழில் லாபகரமானதாக இல்லை என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார். எனவே டீசல் அளவில் உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே முதல்வர் மு க ஸ்டாலின் மீனவர்களுக்கு அளிக்கப்படும் டீசல் அளவு உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதாவது ஒரு விசைப்படகுக்கு வருடத்திற்கு அளிக்கப்படும் 18,000 லிட்டர் டீசல் அளவை 19,000 லிட்டர் ஆகவும், ஒரு நாட்டு படகுகளுக்கான அளவை வருடத்திற்கு 4000 லிட்டரில் இருந்து 4400 லிட்டர் ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தான் தமிழக அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டிலேயே மீனவர்களுக்கான டீசல் அளவு உயர்த்தி அளிக்கப்படும்.