
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இயல்பை விட அதிக அளவில் மழை பொழிவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவுகிறது. குறிப்பாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் உறைபனி நிலவுகிறது. இதனால் அந்த பகுதிகள் குட்டி காஷ்மீர் போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஜனவரி 10ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இதே போன்று அன்றைய தினம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.