
தமிழகம் முழுவதும் 476 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் இந்த கல்லூரிகளில் பிஇ மற்றும் பி டெக் ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளது. நடப்பு கல்வி ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 22 இன்று தொடங்குகின்றது.
முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகின்றது. அரசு பள்ளி சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும் நாளையும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வு குறித்து tneaonline.org என்ற இணையதளம் மூலம் அறியலாம்