திருவண்ணாமலை மாவட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் இரண்டாவது ஆக சரண்யா (29) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் தீபாவளிக்கு முந்தைய தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சரண்யா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்பட்டது.

குழந்தைகள் தன் தாய் எங்கே என்று கோபியிடம் கேட்ட நிலையில் அவர் வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறிய கோபி 4 நாட்களுக்குப் பிறகு தன் மனைவியை காணவில்லை எனக்கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரண்யாவின் பெற்றோரிடம் விசாரித்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்து குழந்தைகளிடம் கேட்டனர். அப்போது குழந்தைகள் உங்கள் வீட்டுக்கு தான் வந்துள்ளதாக அப்பா கூறியதாக கூறினர். இதில் சந்தேகம் அடைந்த சரண்யா பெற்றோர் திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் ‌ போலீசார் கோபியிடம் விசாரணை நடத்த சென்ற நிலையில் அவர் தப்பி ஓடிவிட்டதால் அவரின் தாய் சிவகாமியிடம் விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது மருமகளை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி ஒரு சூட்கேஸில் அடைத்து சூளகிரி பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் வீசியதாக கூறினர். காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கோபியையும் கைது செய்த நிலையில் பின்னர் இருவரையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றனர். மொத்தம் சரண்யாவை 8 துண்டுகளாக வெட்டிய நிலையில் தலை மற்றும் சில உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.