தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் 15 மாவட்ட செயலாளர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து செல்வப் பெருந்தகையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வப் பெருந்தகை தமிழகத்தில் திமுக ஆட்சியை பார்த்து எங்கெல்லாம் நல்லாட்சி நடைபெறுகிறதோ அதுவும் காமராஜர் ஆட்சி தான் என்று கூறினார். இதன் காரணமாக அவர் திமுகவுக்கு மிகவும் இணக்கமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் எம்‌பி மாணிக்கம் தாகூர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை பார்க்காத படிக்காத ஒருவர் அதை மற்றவைகளுடன் ஒப்பிடுவது தவறு.

அன்பு தலைவர் ராஜீவ் காந்தியின் கனவு காமராஜர் ஆட்சி. அது உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரர்களின் கனவு அது கண்டிப்பாக ஒருநாள் நடக்கும் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செல்வ பெருந்தகை, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை மற்றும் முழக்கம் இருக்கும். எங்களுடைய கொள்கை மற்றும் முழக்கம் காமராஜர் ஆட்சிதான். எங்கெல்லாம் நல்லாட்சி நடைபெறுகிறதோ அதுவும் காமராஜர் ஆட்சி தான். மாணிக்கம் தாகூர் புரிதல் இல்லாமல் பேசியுள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் செல்வப் பெருந்தகை தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி நடைபெறுவதாக கூறிய நிலையில் மாணிக்கம் தாகூர் அதனை மறுத்து கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது செல்வப் பெருந்தகை அவருடைய கருத்து தவறு என்று கூறியுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.