சென்ற ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அத்துறையின் அமைச்சர், தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்திலுள்ள 5,329 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்துக்கு உள்ளே இருக்கும் கடைகள், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகளை கணக்கெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த வகையில் 500 மதுக்கடைகளை இன்று முதல் (ஜூன்.22) மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் இன்று முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் மூடப்படுமென டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்