
தென்மேற்கு வங்கக் கடலின் பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக பகுதிகளின் மேல்நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இரு நாட்களாக மழை பெய்து வரும் வேலையில் கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் விடிய விடிய மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் கடலூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழ்நாட்டில் நாளை 24 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.