தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம், தேர்வு, பணி நியமனம் மற்றும் சம்பளம் முறை ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பொதுவான பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொது பாடத்திட்டம் இந்த வருடம் முதல் அமலாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டுமல்லாமல் தன்னாட்சி கல்லூரிகளும் பொது பாடத்திட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 100% பொதுப்பாட திட்டம் அமலாகும் என்றும் மற்ற பாடங்களில் 25% மாற்றங்கள் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்பட்டு ரிசல்ட் வெளியிடப்படும். பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிநிலைகள் மற்றும் சம்பளம் நிர்ணயம் ஒரே வகையில் ஏற்படுத்தப்படும். அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள நான்காயிரம் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பேராசிரியர் நியமனங்களுக்கு உரிய கல்வி தகுதியான செட் தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் ஆண்டுக்கு ஒரு முறை இது கட்டாயம் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.