தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து வருவதும், இறப்பு விகிதம் ஒரு நிலையான சராசரியை எட்டியிருப்பதும் மாநிலத்தின் மக்கள் தொகை அமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் பிறப்பு – இறப்பு புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2019-ஆம் ஆண்டில் 9,45,962-ஆக இருந்த குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 8,02,628-ஆகக் குறைந்துள்ளது. இது 15.15 சதவீதச் சரிவாகும். புதிய தலைமுறையினரின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது வருங்காலங்களில் மக்கள் தொகை வளர்ச்சியில் பெரும் மந்தநிலையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிறப்பு விகிதம் சரிந்தாலும், இறப்பு விகிதம் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட சராசரியிலேயே நீடிக்கிறது. கடந்த 2025-ஆம் ஆண்டில் (ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை) தமிழகத்தில் மொத்தம் 6,90,014 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை (2024) விட 5,600 குறைவாகும்.

கடந்த 8 ஆண்டுகளின் இறப்புப் புள்ளிவிவரம்:

ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
2018 5,49,348
2019 6,38,553
2020 6,91,380
2021 8,74,978 (கரோனா பாதிப்பு அதிகம்)
2022 6,96,115
2023 6,93,086
2024 6,95,680
2025 6,90,014

 

இறப்பு விகிதம் பெரிய அளவில் அதிகரிக்காமல் இருப்பதற்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்ட அவசர மருத்துவச் சேவைகள், மாவட்ட மருத்துவமனைகளில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதய நோய் தொடர்பான விழிப்புணர்வு ஆகியவை முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தமிழகத்தில் முதியோர் மக்கள் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து வருவதால், வரும் காலங்களில் ஆண்டுக்கு 6.5 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான மரணங்கள் என்பது ஒரு சராசரி வரம்பாகவே நீடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தமிழகத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியோர்களின் சதவீதம் அதிகரிக்கும் ‘வயது மாற்றம்’ (Aging Population) தெளிவாகத் தெரிகிறது. இது சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் புதிய சவால்களை உருவாக்கும் என மக்கள் தொகை ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.