தமிழகத்தில் பொது கட்டட விதிகளில் திருத்தம் செய்து, தனி வீடுகள் கட்டும் வகையில் புதிய நிபந்தனைகள் மாநில அரசு வெளியிட்டுள்ளது.

புதிய அரசாணையின் படி, 3,300 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட தனி வீடுகளில் குறைந்தது 2 கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுக்கு நிச்சயமாக நிழற்பிடி வசதியுடன் நிறுத்துமிடம் (பார்க்கிங் ஸ்பேஸ்) ஒதுக்கப்பட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிபந்தனை அனைத்து புதிய வீடுகள் கட்டுமானங்களுக்கும் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட வீடுகளில், 4 கார்கள் மற்றும் 4 பைக்குகளுக்கான தனி நிறுத்துமிடம் வழங்கப்பட வேண்டும் எனவும் விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையதள சேவை மற்றும் தொலை தொடர்பு வசதிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நகர்ப்புற வசதிகளை மேம்படுத்தவும், பரபரப்பான இடங்களில் வாகன நெரிசலை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது