தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமலையாம்பாளையம் பகுதியில் 20 வயது கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இவர் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கி குனியமுத்தூரில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட ஒரு பெண் உங்களுடன் தோழியாக இருக்க விரும்புகிறேன் என குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதனை ஏற்றுக் கொண்டு மாணவரும் தொடர்ந்து அந்த பெண்ணுடன் பேசியுள்ளார். அந்த பெண் தான் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்ப்பதாக கூறினார்.

கடந்த 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு கல்லூரி மாணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பெண் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். அதனை நம்பிய கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றார். மீண்டும் மாணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அந்த பெண் காங்கயம்பாளையம் அருகே பிரபலமான பிரியாணி கடை உள்ளது. அங்கு வந்தால் பிரியாணி சாப்பிடலாம் என கூறினார். மாணவர் அங்கு சென்றதும் அந்த பெண், அருகில் தான் தோழி வீடு உள்ளது.

அங்கு சென்று தனிமையில் பேசி விட்டு செல்லலாம் என அழைத்தார். உடனே அந்த பெண்ணுடன் கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் சிறிது தூரம் சென்றார். அப்போது திடீரென வந்த நான்கு மர்ம நபர்கள் மாணவனை வழிமறித்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அந்த கும்பலுடன் இன்ஸ்டாகிராம் தோழியும் சென்று விட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவரை தாக்கிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.