மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் தனியார் கட்டிடம் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டிடத்தில் டைல்ஸ் பதிக்கும் வேலைக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து மதுசூதனன் பிராஜாப்தி (30), கியானந்த பிரதாப் கவுத் (22) ஆகிய இருவருடன் சேர்த்து மொத்தம் 6 பணியாளர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் மதுசூதனன் பிராஜாப்தி, கியானந்த பிரதாப் கவுத் ஆகிய இருவரும் நேற்று புளியங்குளம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர்.

அந்நேரத்தில் மதுரையில் இருந்து மானாமதுரை வரை தண்டவாள ஆய்வுக்காக ரெயில் என்ஜின் இயக்கப்பட்டு கொண்டிருந்தது. இதற்கிடையில் தண்டவாளத்தில் அவர்கள்  இருவர் நடந்து சென்று கொண்டிருப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் ஆபாய ஒலி எழுப்பினார். எனினும் அங்கிருந்து வேகமாக வந்த ரெயில் என்ஜின் அவர்கள் இருவர் மீதும் மோதி, தூக்கி வீசியது. இதையடுத்து என்ஜின் டிரைவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.