வாடகை செலுத்தவில்லை எனக் கூறி ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது twitter நிறுவனம் இன்னொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது ட்விட்டர் அலுவலகம் தற்போது கலிபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு ட்விட்டர் நிர்வாகம் 1.36 லட்சம் டாலர் வாடகையை செலுத்தாமல் இருப்பதாக twitter நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் கொலம்பியா ரெய்ட் என்ற நிறுவனத்தின் கட்டிடத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்திற்கு  செலுத்தப்பட வேண்டிய வாடகையை ட்விட்டர் நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து டிசம்பர் 16-ஆம் தேதி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது, twitter நிறுவனம் செலுத்த வேண்டிய 1,36,250 டாலர் வாடகை தொகையை ஐந்து நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பின்பும் ட்விட்டர் நிறுவனம் வாடகை செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மாகாண நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக கொலம்பியா ரெய்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தலைமை அலுவலகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள மற்ற அலுவலகங்களுக்கும் ட்விட்டர் நிறுவனம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுபோக இரண்டு தனி விமானங்களுக்கான வாடகையை செலுத்தாமல் இருப்பதற்காகவும் தனியாக twitter நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.