டெல்லியில் 2022 ஆம் வருடம் காற்றின் தரம் 1,096 மணிநேரம் மட்டுமே “நல்லது” என்ற பிரிவில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 2021 ஆம் வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது. கடந்த 2021 ஆம் வருடம் மொத்தம் 827 மணி நேரம் காற்றின் தரம் “நல்லது” என்ற பிரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 2022 ஆம் வருடம் காற்றின் தரம் கடுமையான’ பிரிவில் 204 மணி நேரம் மட்டுமே இருந்துள்ளது (PM 2.5 துகள்கள் அடிப்படையில்). இது மொத்த நேரத்தில் 2.3 சதவீதம் ஆகும். சென்ற 2021 ஆம் வருடம் மொத்த நேரத்தில் 7.2 %, 628 மணிநேரம் கடுமையான பிரிவில் இருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அடிப்படையில் 2021 ஆம் வருடத்துடன் ஒப்பிடும்போது 2022-ம் வருடம் காற்றின் தரம் “நல்ல” பிரிவில் இருந்த நேரம் அதிகரித்து உள்ளது.

கடுமையான பிரிவில் இருந்த நேரம் குறைந்திருக்கிறது. அத்துடன் PM 2.5 மற்றும் PM 10 துகள்களின் சராசரி செறிவு குறைந்து உள்ளது. வருடத்தின் முதல் நாளான இன்று டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 252 ஆக மோசமான பிரிவில் இருக்கிறது. 2022ம் வருடத்தின் இறுதி  நாளான நேற்று காற்றின் தரக்குறியீடு 369ஆக மிகவும் மோசமான பிரிவில் இருந்தது.