தலைநகர் டெல்லியில் மண்டோலி சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் கடந்த 15 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த 15 நாட்கள் சோதனையின் போது சிறை கைதிகளிடமிருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், மண்டோலி சிறையின் துணை கண்காணிப்பாளர் பிரதீப் ஷர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்திரா மவுரியா, உதவி கண்காணிப்பாளர் சன்னி சந்திரா, தலைமை வார்டன் லோகேஷ் தாமா, வார்டன் ஹன்ஸ் ராஜ் மீனா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தொடரும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இயக்குனர் ஜெனரல் சஞ்சய் பானிவால் அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் சிறைகளில் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டுபிடிப்பதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.