கர்நாடகா பெங்களூரு அருகிலுள்ள அமிர்தல்லி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், சென்ற டிசம்பர் 21ம் தேதி அப்பகுதியிலுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது கோவிலுக்குள் வழிபாடு செய்துகொண்டிருந்த பெண்ணை, அறங்காவலரான முனி கிருஷ்ணப்பா என்பவர், “நீ கருப்பாக இருப்பதாகவும், பார்த்தால் குளித்து விட்டு வந்தது போல இல்லை எனவும் கூறி இழிவாக பேசியுள்ளார். மேலும் அப்பெண் பார்ப்பதற்கு விநோதமாக இருப்பதால் அவரை சாமி கும்பிட அனுமதிக்க முடியாது என  கூறி தாக்கி உள்ளார்.

அதுமட்டுமின்றி அவரது முடியை பிடித்து இழுத்து சென்று, கோவிலுக்கு வெளியே தள்ளியதாக தெரிகிறது. இதோடு நிறுத்திக்கொள்ளமல் இது பற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் முனி கிருஷ்ணப்பா மிரட்டியதாக தெரிகிறது. இக்காட்சிகள் அனைத்தும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பெண் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும், அதன் காரணமாகவே அவரை வெளியேற்ற வேண்டியிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.