தேனி பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒரு கல்லூரியில் படித்து கொண்டே டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனால் இளம்பெண் டெலிகிராம் செயலியில் போட்டி தேர்வு தொடர்பான குழுவில் சேர்ந்தார். அதே குழுவில் இருந்த தளபதி என்ற பயனர் கணக்கில் இருந்த நபர் இளம் பெண்ணுக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பி நட்பாக பழகினார். இதனையடுத்து பெண்ணின் இன்ஸ்டாகிராம் சமூகவலைதள பயணக் கணக்கு மற்றும் கடவுச்சொல் விவரங்களை அவர் தெரிந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை சேமித்து வைத்துக்கொண்டு வீடியோ காலில் நிர்வாணமாக பேசவில்லை என்றால் புகைப்படங்களை மார்க்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என அவர் மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த பெண்ணும் வீடியோ கால் செய்து பேசியதாக தெரிகிறது. அதனையும் வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு அவர் மிரட்டியுள்ளார்.

உடனே அந்த பெண் டெலிகிராம் செயலியில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து அவரது தம்பியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு வாலிபர் உனது அக்காளின் நிர்வாண வீடியோ இருக்கிறது. இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கவில்லை என்றால் அதனை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தேனி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த பிஎஸ்சி பட்டதாரியான யோகேஷ் குமார் என்பவர் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பெண்களுக்கு உதவி செய்வது போல நடித்து புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்