உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், தனது சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ (முன்னாள் ட்விட்டர்) தளத்தை ரூ.2.82 லட்சம் கோடி மதிப்பில், தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவமான xAI-க்கு விற்பனை செய்துள்ளார். ட்விட்டரை 2022-இல் சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய அவர், அதன் பெயர், லோகோ, கட்டண முறை உள்ளிட்டவற்றில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தார். இப்போது, X தளத்தையும் xAI நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக இந்த பரிவர்த்தனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

xAI நிறுவனத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலராகவும், X-ன் தற்போதைய மதிப்பு 33 பில்லியன் டாலராகவும் இருக்கிறது என எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம், தரவுகள், மாதிரிகள், கணிப்பொறி சக்தி, விநியோகம் மற்றும் திறமைகளை ஒருங்கிணைத்து, உலகளாவிய அளவில் புத்திசாலித்தனமான மற்றும் அர்த்தமுள்ள பயண அனுபவங்களை உருவாக்கும் என மஸ்க் தெரிவித்துள்ளார். “இது வெறும் ஆரம்பம்” எனும் அவரது உரை, எதிர்காலத்தில் X மற்றும் xAI இணைப்பு மூலம், மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றங்களை காணக்கூடும் என்பதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.