புதுச்சேரி சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீமான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு திரண்டிருந்த தமிழக வெற்றி கழக (தவெக) தொண்டர்கள் திடீரென ‘டிவிகே.. டிவிகே’ என முழக்கமிட்டனர். இதனால் கடும் கோபமடைந்த சீமான், தனது பிரசார வாகனத்தில் இருந்தபடி, “டீ விக்கிறியா? இங்க வந்து டீ வித்துட்டு போடா” என அந்தத் தொண்டர்களை நோக்கி ஆவேசமாகப் பேசினார்.

​இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியினர் கோஷமிட்ட நபரைத் தாக்க முயன்றதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. தனது பேச்சைத் தொடர்ந்த சீமான், தனது தம்பிகள் அறிவார்ந்த பிள்ளைகள் என்றும், கோஷமிட்ட தவெக தொண்டர்கள் ‘தற்குறிகள்’ மற்றும் ‘கோமாளிகள்’ என்றும் கடுமையாகச் சாடினார். தேர்தல் நெருங்கும் வேளையில் சீமான் மற்றும் விஜய் தொண்டர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.