
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் தம்மம்பட்டி பேரூராட்சி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தம்மம்பட்டி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதாக பொதுமக்கள் அளித்த புகாரின்படி, அதனை சீரமைக்கும் பணியில் விக்னேஷ் மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் விக்னேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.