
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள அழுந்தலைப்பூர் கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஆண்டு தோறும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரிசி ஆலையில் வீட்டு உபயோகத்திற்காக அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி வந்தனர்.
அதனால் மண்ணச்சநல்லூர் அரிசி ஆலையில் அரிசி வாங்குவதற்காக 20 பெண்கள் டிராக்டரில் சென்று உள்ளனர். இந்த நிலையில் அரிசி மூட்டைகளை ஏற்றிவிட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இருதயபுரம் அருகே டிராக்டர் சென்றபோது எதிரே வந்த டாரஸ் லாரி டிராக்டர் மீது மோதியது.
இந்த விபத்தில் அரிசி மூட்டைகளின் மேலே அமர்ந்து இருந்த சாந்தி, செல்வநாயகி மற்றும் ராசாம்பாள் ஆகிய மூவரும் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியானவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.