பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் சோனு குமார் (30) என்ற ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சமஸ்திபூர் மாவட்டத்தின் முஃபாசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லகுனியன் ரகுகாந்த் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப் பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அவரது மனைவி ஸ்மிதா ஜாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சோனுவின் தந்தை துன்டுன் ஜா கூறியதன்படி, சோனுவுக்கும் ஸ்மிதாவுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளாக திருமணம் ஆன நாளிலிருந்து சண்டைகள் நடைபெற்று வந்துள்ளன.  இந்த குடும்பத்தகராறு காரணமாக பஞ்சாயத்தில் விசாரணையும் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

சோனு குமாரின் தந்தை அளித்த வாக்குமூலத்தில், ஒரு நாள் டியூஷன் ஆசிரியரான ஹரிஓம் குமார், ஸ்மிதாவுடன் அறையில் தனிமையில் இருப்பதைக் கண்டு சோனு சந்தேகமுற்றதாகவும், இதனைத்தொடர்ந்தே இருவரிடையே கடும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்த நாள் காலையில் அவரது அறையில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என்றும், ஸ்மிதா ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்திருந்தார் என்றும் தந்தை கூறியுள்ளார்.

பாதிக்கபட்ட சோனுவின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக சதார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஸ்மிதா மட்டுமின்றி மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வந்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.