முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். அதன் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். தற்போது ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒன்றை நடத்தி அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். இப்படியான நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அனைவரும் ஒருங்கிணைந்து அதிமுக கட்சியை வழிநடத்த வேண்டும் என ஓபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதன்படி ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், ஜெயலலிதா இருந்தவரை கட்சியை எந்த அளவிற்கு நிலை நிறுத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்குப் பின்னால் நடைபெற்ற அரசியல், சூது, சூழ்ச்சி மற்றும் நம்பிக்கை துரோகம் இதெல்லாம் யாரால் அகற்றப்பட்டது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இதனால் நடைபெற்ற 11 தேர்தல்களிலும் தோல்வியை தான் அதிமுக சந்தித்தது. இதற்கு எல்லாம் காரணம் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அடம் பிடித்து அதை ஏற்றுக் கொண்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். தமிழக மக்கள் விரும்புவது இரு மொழிக் கொள்கையை தான். ஜெயலலிதா அதை தீர்மானமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். எங்களுடைய நிலைப்பாடும் இரு மொழி கொள்கைதான். மாநில நிதியாக இருந்தாலும் சரி மத்திய நிதியாக இருந்தாலும் சரி அது மக்களுடைய வரிப்பணம். தொண்டர்களுடைய விருப்பம் கட்சி இணைய வேண்டும் என்பதுதான். தொண்டர்களின் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.