நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதிலும் பகல் இரவு என உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வர தொடங்கியுள்ளன. இந்நிலையில் மஞ்சமலை சாலையில் நான்கு கரடிகள் ஒய்யாரமாக நடந்து சென்றதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர்.

வெகு நேரமாக சாலையில் சுற்றி திரிந்து விட்டு நான்கு கரடிகளும் அருகே இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. அதன் பிறகு தான் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனாலும் தொடர்ந்து இதுபோல் கரடிகள் உலா வருவதால் வனத்துறையினர் அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.