தமிழக அரசு வெளியிட்ட 2025 – 2026 பட்ஜெட்டில், ‘அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்’ என்ற மெகா அறிவிப்பு வெளியாகி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சொன்னதைச் செய்யும் விதமாக, இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வரும் 5-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், முதற்கட்டமாக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. நவீன காலக் கல்விக்கு மடிக்கணினி மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கும் உயர்தரக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
முதலாமாண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, படிப்படியாக 20 லட்சம் மாணவர்களுக்கும் லேப்டாப் சென்றடையத் தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. முதல்வரின் இந்த அதிரடித் தொடக்கம், தமிழக மாணவர்களின் எதிர்காலக் கல்விப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
