உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், தனது வளர்ப்பு மகளை (உறவினர் மகள்) பாலியல் வன்கொடுமை செய்த சொந்த மகன் மீது தாயே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிதௌலி காவல் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தனது தம்பி மகளை சிறுவயதிலிருந்தே வளர்த்து வந்துள்ளார். சிறுமியின் தாய் இறந்துவிட்டதாலும், தந்தை தவறான பழக்கங்களுக்கு அடிமையானவர் என்பதாலும், அந்தச் சிறுமி தனது அத்தையின் வீட்டிலேயே வளர்ந்து வந்துள்ளார். அத்தையின் மகன், அந்தச் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், அந்தச் சிறுமி திடீரென கர்ப்பமடைந்தார். இந்த அதிர்ச்சித் தகவலைத் தனது அத்தையிடம் சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார்.
தன் வீட்டில் மகளாக வளர்ந்த சிறுமிக்குத் தனது சொந்த மகனே இழைத்த அநீதியைக் கண்டு அந்தத் தாய் கொதித்தெழுந்தார். பெற்ற மகன் என்றும் பாராமல், உடனடியாக காவல் நிலையம் சென்று தனது மகன் மீது குற்றப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷயம் வெளியில் தெரிந்தவுடன் தலைமறைவான அந்த வாலிபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தாயாக இருந்து வளர்த்த அத்தையே, குற்றவாளியான தனது மகனுக்கு எதிராகக் களமிறங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
