அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் இலஹான் உமர் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், இலஹான் உமரின் பேசும் முறையை கேலி செய்ததோடு, அவர் தனது சகோதரரையே திருமணம் செய்துகொண்டதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
மேடையில் பேசிய ட்ரம்ப், “இலஹான் உமர் தனது சொந்த சகோதரரையே திருமணம் செய்து கொண்டதாக நான் கருதுகிறேன். இது சட்டப்படி முற்றிலும் தவறானது. உண்மையைச் சொல்லப்போனால், அவர்கள் ஒரு அழகான ஜோடிதான், ஆனால் அது சட்டவிரோதமானது,” என்று கிண்டலாகத் தெரிவித்தார்.
.@POTUS on Ilhan Omar: “I believe she married her brother, which is totally illegal — although, it’s a lovely couple, actually, but it’s a little bit on the illegal side.”
“‘Darling, I love you very much.’ ‘Goodnight, brother. Let’s go to bed’ — Isn’t she despicable?” 🤣 pic.twitter.com/5AwlAX0EXs
— Rapid Response 47 (@RapidResponse47) May 1, 2026
மேலும், இலஹான் உமரின் பேசும் பாணியை மிமிக்ரி செய்த ட்ரம்ப், கற்பனையான உரையாடல் ஒன்றையும் மேடையில் நடித்துக் காட்டினார். “அன்பே, நான் உன்னை நேசிக்கிறேன். குட்நைட் சகோதரரே, வா தூங்கப் போகலாம்,” என அவர் கூறியபோது அங்கிருந்த ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், “அவர் (இலஹான்) அருவருப்பானவர் இல்லையா? அவரைப் பார்ப்பதைக் கூட என்னால் சகிக்க முடியவில்லை,” என்று தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.
இலஹான் உமர் சோமாலியாவிலிருந்து குடிபெயர்ந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், அந்நாட்டை கடுமையாகச் சாடினார். “சோமாலியா ஒரு அழகான இடம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு அரசாங்கமும் இல்லை, ராணுவமும் இல்லை. வறுமை, மாசுபாடு மற்றும் குற்றங்கள் மட்டுமே அங்கு மலிந்து கிடக்கின்றன. உலகின் மோசமான ஒரு நாட்டிலிருந்து வந்துகொண்டு, அமெரிக்காவை எப்படி ஆள வேண்டும் என்று அவர் நமக்கு வகுப்பு எடுக்கிறார் எனத் தெரிவித்தார்.
இலஹான் உமர் மீது நிதி மோசடி புகாரையும் ட்ரம்ப் முன்வைத்தார். “கடந்த மாதம் தனது சொத்து மதிப்பு 38 மில்லியன் டாலர் என அவர் அறிவித்தார். ஆனால், சட்ட அமலாக்கத் துறை விசாரணை நடத்தத் தொடங்கியவுடன், திடீரென அது 80,000 டாலராகக் குறைந்தது. இது கணக்கியல் தவறு என்று அவர் சாக்குப்போக்கு கூறுகிறார். இத்தகைய நபர்களின் வாழ்க்கையே மோசடிகளின் அடிப்படையில் அமைந்தது. இவர்களை போன்றவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ட்ரம்ப் ஆவேசமாகப் பேசினார்.
முன்னதாக, இலஹான் உமர் தனது குடியேற்ற விசாவுக்காகத் தனது சகோதரரைத் திருமணம் செய்ததாகக் கன்சர்வேட்டிவ் அமைப்புகள் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ட்ரம்ப் மீண்டும் இந்தப் பழைய விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
