பாகிஸ்தான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘சுபார்கோ’ (SUPARCO), சமீபத்தில் விண்ணில் ஏவிய செயற்கைக்கோள் அனுப்பியதாகக் கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, தற்போது உலக அரங்கில் கேலிப்பொருள் ஆகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 25-ம் தேதியன்று, சீனாவின் லாங் மார்ச் 6 ராக்கெட் உதவியுடன் பாகிஸ்தான் தனது ‘EO-3’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. விண்வெளித் துறையில் தாங்கள் மிகப்பெரிய மைல்கல்லை எட்டிவிட்டதாகக் கொண்டாடிய பாகிஸ்தான், கராச்சி துறைமுகத்தின் மிகத் தெளிவான புகைப்படத்தை அந்தச் செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியதாகப் பெருமையுடன் வெளியிட்டது.

ஆனால், பாகிஸ்தானின் இந்த மகிழ்ச்சி சில மணிநேரங்கள் கூட நீடிக்கவில்லை. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அந்தப் புகைப்படத்தின் தரவுகளை ஆய்வு செய்தபோது, அந்தப் புகைப்படம் 2025-ம் ஆண்டே, அதாவது செயற்கைக்கோள் ஏவப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்பது அம்பலமானது. இது புதிய செயற்கைக்கோள் எடுத்த படம் அல்ல, ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்ட பழைய படம் என்பது உறுதியானதால் சுபார்கோ நிறுவனம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 பாகிஸ்தானின் விண்வெளித் திட்டம் இந்தியாவின் ‘இஸ்ரோ’ (ISRO) தொடங்கப்படுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1961-லேயே தொடங்கப்பட்டது. ஆனால், வளர்ச்சிக்குப் பதிலாக விளம்பரத்திற்கே அந்நாடு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2001-ல் ‘பத்ர்-பி’ செயற்கைக்கோள் ஏவப்பட்டு சில நாட்களிலேயே காணாமல் போனது. ஆனால், அது குறித்து பாகிஸ்தான் வாய் திறக்கவில்லை. 2002-ல் பர்வேஸ் முஷாரப் காலத்தில், இந்தோனேசியா நாட்டுக்காகத் தயாரிக்கப்பட்டு, பேட்டரி கோளாறு காரணமாகத் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு பழைய செயற்கைக்கோளை 50 லட்சம் டாலருக்கு வாங்கி, அதற்கு ‘பாக்சாட்-1’ எனப் பெயரிட்டு, தாங்களே தயாரித்தது போல உலகை ஏமாற்றிய வரலாறும் பாகிஸ்தானுக்கு உண்டு.

தற்போது ஏவப்பட்டுள்ள ‘EO-3’ செயற்கைக்கோள் பாகிஸ்தானிலேயே வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த புகைப்பட ஆதாரத்திலேயே பொய்யைக் கலந்ததால், அந்தத் திட்டத்தின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. “உண்மையான சாதனை படைப்பதை விட, போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதிலேயே பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகிறது” என சர்வதேச விண்வெளி ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.