செல்போன் வாங்கித் தர முடியாது என்ற பெற்றோரின் மறுப்பில் மனமுடைந்த 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் சங்கபூர் பகுதியில் நடந்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியின் இரு மகள்களில், 13 வயதான இளைய மகள் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் செல்போனை பயன்படுத்தி அவர் அடிக்கடி கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனக்கென புதிய செல்போன் வாங்கித் தரும்படி அவர் பெற்றோரிடம் பலமுறை கேட்டிருந்தார்.

ஆனால், சிறுமிக்கு தனிப்பட்ட செல்போன் தேவையில்லை என்று பெற்றோர் கூறி மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவிலுக்கு சென்றிருந்த சிறுமியின் தாய் மற்றும் மூத்த மகள் வீடு திரும்பியபோது, சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து சேர்ந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.