தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பல்வேறு சைபர் மோசடி வழக்குகளுடன் தொடர்புடைய 20 நபர்கள் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 1 முதல் 10ஆம் தேதி வரை தெலுங்கானா சைபர் பாதுகாப்பு (TGCSB) சார்பில் நடைபெற்ற இந்த மாநிலங்களுக்கு இடையிலான சிறப்பு நடவடிக்கையை TGCSB இயக்குநர் சிகா கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த அதிரடி சோதனை நடவடிக்கையில், 20 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 14 பேர் “ம்யூல்” கணக்கு வைத்திருந்தவர்களாகவும், 6 பேர் ஏஜென்ட்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மூலமாக சுமார் 27 சந்தேகமான வங்கி கணக்குகள் இயங்கியுள்ளன. இதில் மட்டும் ரூ.4.37 கோடி சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. தெலுங்கானா மாநிலத்திலேயே மட்டும் ரூ.22,64,500 மதிப்பில் காசோலை மூலம் பணம் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் DCB வங்கியின் வாபி கிளையில் பணியாற்றிய ரிலேஷன்ஷிப் மேனேஜரும் உள்ளனர். இவர்கள் பங்குசந்தை முதலீட்டு மோசடிகள், பைனான்ஸ் டிரேடிங், மற்றும் பைன்டைம் வேலை வாய்ப்பு எனும் பெயரில் மக்கள் பணத்தை  மோசடி செய்துள்ளனர். இவர்களிடமிருந்து, 20 மொபைல் போன்கள், 8 சிம் கார்டுகள், 4 ஏ.டி.எம். கார்டுகள், 5 காசோலை புத்தகங்கள், 2 பான் கார்டுகள், 2 ரப்பர் ஸ்டாம்புகள், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் டிரான்ஸிட் வாரண்ட் மூலம் தெலுங்கானாவுக்கு கொண்டு வரப்பட்டு, தற்போது வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தப்பி ஓடியுள்ள குற்றவாளிகளை பிடிக்க விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் போலியான வங்கி கணக்குகளின் மோசடிகளை முறியடிப்பதே என TGCSB தெரிவித்துள்ளது. “தெலுங்கானாவை சைபர் பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவது எங்கள் இலக்கு” என இயக்குநர் சிகா கோயல் உறுதிமொழி அளித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையில் TGCSB தலைமையகத்தில் இயங்கும் ரியல் டைம் டெக்னிக்கல் சப்போர்ட் குழு நாள் முழுவதும் பணியாற்றி, புலனாய்வுத் துறையுடன் இணைந்து சிறப்பாக இந்த செயல்பாட்டை நிறைவேற்றியுள்ளது.