சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி பெரும் ரசிகர்களின் வரவால் களைகட்டியது. இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் மைதானத்திற்கு திரண்டனர். இந்த கூட்ட நெரிசலை தவறாக பயன்படுத்தி சிலர் திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் மொத்தம் 36 செல்போன்கள் மற்றும் ஒரு ஐபேட் திருடப்பட்டதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார்கள் பெறப்பட்டன.

இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், துணை ஆணையர் ஜெயசந்திரன் தலைமையில் சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தனிப்படை போலீசார் மைதானத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன், ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் சந்தேகப்படத்தக்க நபர்களை கண்டறிந்தனர்.

விசாரணையின் போது, வேலூரில் இரண்டு லாட்ஜ்களில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 36 செல்போன்கள் மற்றும் ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பல், பெங்களூருவில் நடைபெற்ற போட்டிகளிலும் இதேபோன்ற திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

தனிப்படை அதிகாரிகள் கூறுகையில், இந்தக் கும்பல் ஜார்கண்டிலிருந்து வேலூரில் தங்கி, போட்டி நடைபெறும் நாளில் சென்னைக்குச் சென்று திருட்டு செய்திருக்கிறார்கள். வேலூர் என்பது சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இடைநிலையாக இருப்பதால், அவர்களது செயல்திட்டத்துக்கு ஏற்ற இடமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்துக் கொண்டிருக்கும் நேரங்களில், இந்தக் கும்பல் பொது மக்களின் கவனத்தை திருப்பி, செல்போன்களை திருடியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே “சென்னை சிங்கம் ஐபிஎல்” என்ற QR குறியீட்டு முறையின் மூலமும், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன், பறிக்கப்பட்ட பொருட்களை உரிய உரிமையாளர்களிடம் விரைவில் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.