தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக தமிழக அரசால் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு சமூக நல அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் ஒரு பங்கு நிதியும், பொதுமக்கள், நிறுவனங்கள், அரசு சார்பில் இரண்டு பங்கு நிதியும் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக மக்கள் பரிந்துரைத்த திட்ட பணிகளில் மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. அதேப்போல் திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளி வகுப்பறைகளில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் வகுப்பறைகளை நவீன வசதிகளின் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திட்ட பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தங்களது பங்களிப்பை அளிக்க முன்வரலாம் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.