
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதாவது சென்னை பெரம்பூரில் வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது உணவு டெலிவரி செய்ய ஊழியர்கள் போல் சிலர் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நொடியில் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்தனர். இதனை தடுக்க வந்த அவருடைய நண்பர்கள் இரண்டு பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்த நிலையில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உட்பட அருள், செல்வராஜ், திருமலை, ராமு, திருவேங்கடம், சந்தோஷ், மணிவண்ணன் உட்பட 8 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். சென்னையில் கடந்த வருடம் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய கொலைக்கு பழிவாங்குவதற்காக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.