பொங்கலுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டதால் அதிகாலை முதலே வீடுகளில் இருந்து பழைய பொருட்களை பொதுமக்கள் வீட்டு வாசலில் தீயிட்டு எரித்தனர். இதனால் சென்னையில் பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி போகி பண்டிகையை  முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு  ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களுடைய பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, ரப்பர் டியூப், டயர் மற்றும் நெகிழி போன்றவற்றை எரிப்பதை தவிர்த்திட வேண்டும் எனவும் அதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது.

இதன்படி 100 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் பொதுமக்களிடமிருந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில்போகி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பழைய பொருட்களை எரித்ததால் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, காலை 6 மணி நேரம் நிலவரப்படி காற்று மாசு அளவு ஆலந்தூரில் 155 ஆக அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொடுங்கையூர் 94, மணலி 87, அரும்பாக்கம் 86, வேளச்சேரி 84, பெருங்குடி 113, ராயபுரம் 82 என காற்றின் மாசு அதிகரித்து வருகிறது.