அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுக பாஜக கூட்டணியில் சேர அழைப்பு விடுத்த நிலையில் அவர்கள் கூட்டணி அழைப்பை நிராகரித்துவிட்டனர்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமி விஜய் மற்றும் சீமான் ஆகியோரை கூட்டணியில் சேர அழைப்பு விடுத்துள்ளார். அதாவது 2026 இல் ஒற்றை ஆட்சியை மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.

இது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கும் பொருந்தும். அவர்களும் அதிமுக கூட்டணியில் இணையலாம். நாங்கள் ஆட்சியில் பங்கு கொடுக்க ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கூறவில்லை. திமுகவுக்கு பதிலடி கொடுக்கவே அவ்வாறு கூறினோம் என்றார்.

மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்துள்ளார். மேலும் அதிமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும் எனவும் ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்னும் ஏமாளிகள் அல்ல என்றும் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.