
சென்னை மாவட்டம் பெருங்களத்துறையை சேர்ந்தவர் குமார்(57)- ஜெயா(55) தம்பதியினர். இவர்களுக்கு மோனிஷா(30) என்ற மகள் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டாலின்(36)- துர்கா(32) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் நிலா வேணி என்று குழந்தை உள்ளது. குமார் குடும்பத்தினரும், ஸ்டாலின் குடும்பத்தினரும் ஒன்றாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கும்பகோணத்தில் உள்ள கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அதே காரில் தஞ்சாவூருக்கு செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது கார் தஞ்சாவூர் விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு மினி லாரி வந்தது. அப்போது லாரியும் -காரும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதியதால் இரண்டு வாகனங்களும் முற்றிலும் சேதம் அடைந்தது.
இதனால் காரில் பயணித்த ஜெயா இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கியதால் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தை உட்பட காரில் பயணித்த 5 பேர் மற்றும் லாரி டிரைவர் விக்னேஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த ஜெயாவின் உடலை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குமார், துர்கா மற்றும் 3 வயது சிறுமி உட்பட 3 பேரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.