பொலிவியாவின் பெனி மாகாணத்தில் அமேசான் காட்டை கடந்தபோது பயணித்த சிறிய தனியார் விமானம் திடீரென ரேடாரில் இருந்து காணாமல் போனது. பவுரேஸ் நகரத்திலிருந்து ட்ரினிடாட் நோக்கி புறப்பட்ட விமானம் வியாழக்கிழமை புறப்பட்டு சென்றதிலிருந்து எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், பாதுகாப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து, இடனோமாஸ் ஆற்றருகே சதுப்பு நிலத்தில் அந்த விமானம் தவறி தரையிறங்கியுள்ளதை மீனவர்கள் பார்த்து தகவல் வழங்கினர். அதன்பேரில், அந்த விமானத்தில் பயணித்த மூன்று பெண்கள், ஒரு சிறுவன் மற்றும் விமானி பாப்லோ ஆண்ட்ரஸ் வேலார்டே ஆகிய ஐந்து பேரும் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானி சதுப்பு நிலத்தில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். விமானத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கி இருந்த நிலையில், பயணிகள் விமானத்தின் கூரையில் ஏறி அமர்ந்து 36 மணி நேரம் காத்திருந்தனர்.

அந்த இடம் ஆழமான காடுகள் சூழ்ந்த நிலப்பகுதி என்பதால், அவர்களை சுற்றிலும் முதலைகள், பாம்புகள் சுற்றிக்கொண்டிருந்தன. “முதலைகள் மூன்று மீட்டர் தூரம் வரை நெருங்கின. அனக்கொண்டா பாம்பும் நீரில் நகர்ந்தது,” என விமானி கூறியுள்ளார்.

விமானத்திலிருந்து கசியும் எரிபொருளின் வாசனைதான் விலங்குகள் பக்கத்தில் வர முடியாமல் போனதற்கு காரணமாக இருக்கும் என விமானி கூறியுள்ளார். “அதற்கான விஞ்ஞான ஆதாரம் ஏதும் இல்லையென்றாலும், அந்த வாசனையே நம்மை பாதுகாத்ததுபோல் தோன்றுகிறது,” என்று கூறினார்.

உணவு, குடிநீர் எதுவும் இல்லாத நிலையில், பயணிகள் ஒருவர் எடுத்துச் சென்ற கசாவா மாவை மட்டுமே பகிர்ந்துகொண்டு இரவில் கொசுக்களின் தாக்கத்துடனும், விலங்குகளின் பயத்துடனும் தூக்கமின்றி இருத்ததாக தெரிவித்தனர். மீட்கப்பட்ட அனைவரும் தற்போது மருத்துவ மேற்பார்வையில் பாதுகாப்பாக உள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.