ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று ஈரான் ராணுவம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் கதாம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் சொல்ஃபகாரி (Ibrahim Zolfaghari) பேசுகையில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வீரர்களைப் பாரசீக வளைகுடாவில் உள்ள சுறாக்களுக்கு உணவாக்கப் பார்க்கிறார்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சுமார் 10,000 வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள், ஒரு தற்கொலை முயற்சிக்குச் சமம் என்றும், ஈரானிய மண்ணில் கால் வைக்கும் ஒவ்வொரு வீரரும் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள் என்றும் ஈரான் ஊடகங்கள் எச்சரித்துள்ளன.

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் பேச்சைக் கேட்டு ட்ரம்ப் அமெரிக்க வீரர்களை ஒரு மரணக் குழியில் தள்ளுவதாகக் குற்றம்சாட்டியுள்ள ஈரான், பாரசீக வளைகுடாவைப் பகைவர்களின் இரத்தத்தால் நிரப்பத் தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஈரானின் முக்கிய எண்ணெய் முனையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானின் இந்த ‘சுறா மீன்’ மிரட்டல் போர்க்களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரைவழித் தாக்குதல் நடந்தால் அது அமெரிக்காவிற்கு ஒரு வரலாற்றுத் தோல்வியாக அமையும் என்றும், தங்கள் நாட்டுப் படைகள் அமெரிக்க வீரர்களைச் சுட்டெரிக்கக் காத்திருப்பதாகவும் ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகளுக்கு இடையே முட்டிக்கொள்ளும் இந்த மோதல் போக்கு, உலகப் பொருளாதாரத்திலும் கச்சா எண்ணெய் சந்தையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.