
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நரேந்திர மோடி 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது வெறும் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றுள்ளார். தமிழகத்தில் கூட பாஜக வாங்கிய வாக்குகள் பாமக கட்சிக்கு சொந்தமானது தான்.
தமிழகத்தில் பாமக கட்சிக்கு 7 முதல் 8 சதவீத வாக்கு வங்கிகள் உள்ளது. பாமக கட்சி பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு பாமக கட்சி மட்டும் தான் காரணம். அதன்பிறகு நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது. சீமான் ஒரு பிரிவினைவாதி. அவர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் என்று கூறியுள்ளார். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தமாக 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் மாநில கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.