நாம் தமிழர் கட்சியின் மகளிர் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் காளியம்மாள். மீனவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த கட்சியின் முக்கிய புள்ளியாக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடியில் அடுத்த மாதம் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் காளியம்மாள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் அதில் அவருடைய பெயர் சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகியதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாக விரைவில் நானே அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார். சீமான் சமீப காலமாக பெரியார் குறித்து அவதூறாக பேசுவது சர்ச்சையாக மாறிவரும் நிலையில் ஏராளமான நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகுகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது காளியம்மாளும் விலகியதாக வந்த செய்தி கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கும் காளியம்மாள் முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக கூறப்பட்டது. ஆனால் அதனை காளியம்மாள் மறுத்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் மேடையை அவர் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இதன் காரணமாக திமுக கட்சியில் காளியம்மாள் இணைய இருப்பதாக தற்போது செய்தி பரவி வருகிறது.
