கர்நாடக மாநிலத்தின் தும்கூரில் நர்சிங் கல்லூரி மாணவர் சுரேஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கு புதிய திருப்பம் பெற்றுள்ளது. 20 வயதான சுரேஷ் கர்நாடக மாநிலத்தின் கொப்பள் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மெரிட் அடிப்படையில் சீட் பெற்று தும்கூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். ஜெயநகர் சரஸ்வதிபுரத்தில் வாடகை அறையில் தனியாக தங்கியிருந்தார். சமீபத்தில் அவருடன் இருந்த நண்பர் அறையை காலி செய்ததால் சுரேஷ் தனிமையில் இருந்தார்.
அக்டோபர் 26 அன்று அதிகாலை 3 மணிக்கு சுரேஷ் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “Good Bye My Dear Life RIP” என்று எழுதி பதிவிட்டார். இதைப் பார்த்த பெற்றோர் அவருக்கு போன் செய்தனர். ஆனால் தொடர்பு கிடைக்காததால், சுரேஷின் தந்தை கொப்பளில் இருந்து தும்கூருக்கு வந்தார். அறையைத் திறந்து பார்த்தபோது சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் ஒருதலை காதல் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சுரேஷ் தனது கல்லூரியின் சீனியர் மாணவியை காதலித்ததாக நண்பர்கள் தெரிவித்தனர். கர்நாடக மாநிலத்தின் தும்கூர் ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் சுரேஷ் தந்தை புகார் அளித்துள்ளார். தற்கொலை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
