
தென் கொரியா, சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் (DeepSeek) செயலியை பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. தென் கொரிய தரவு பாதுகாப்பு ஆணையம் இந்த முடிவை தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறி எடுத்துள்ளது. இந்த செயலியின் தரவுப் பாதுகாப்பு நடைமுறைகள் தென் கொரிய சட்டங்களுக்கு ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ள அரசு, புதிதாக செயலியை பதிவிறக்குவதை நிறுத்தியுள்ளது.
தென் கொரியாவின் தரவு பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் சோய் ஜாங்-ஹியூக், “டீப்சீக் செயலியின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு நடைமுறைகளை விரிவாக ஆய்வு செய்யும் வரை செயலியின் பயன்பாடு கண்காணிக்கப்படும்” என்று உறுதி செய்துள்ளார். மேலும், தென் கொரிய தனியுரிமைச் சட்டங்களுடன் இந்த செயலியை இணைப்பதற்கு அதிகமான காலம் தேவைப்படும் என்றும், அதுவரை பாதுகாப்பு காரணங்களால் அரசு அலுவலகங்களில் இதன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிப். 15 முதல், தென் கொரியாவில் டீப்சீக் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் பிற செயலிகள் தரவிறக்கும் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், முன்பே செயலியை பதிவிறக்கம் செய்த பயனர்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம், ஆனால் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தச் செயலியை ஏற்கனவே பயன்படுத்தி வரும் பயனர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றும், செயலியின் சேவையை முழுமையாக நிறுத்தி வைக்க பரிசீலனை செய்யப்படுவதாகவும் தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவுகள், சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியிருக்கிறது.