பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்பது தொடர்பாக நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் அவதூறான கருத்துக்களை பரப்பியதாக கூறிய அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருப்பின் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

இந்நிலையில் சவுக்கு சங்கரை சிறையில் சந்தித்த அவருடைய வழக்கறிஞர் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய மனு கொடுத்துள்ளதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். திமுக அரசு பத்திரிக்கை சுதந்திரம் என்று அடிக்கடி கூறும் நிலையில் தற்போது அவர்களின் ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் நசுக்கப்படுவது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அதன்பிறகு பெண்களை இழிவாக பேசிய மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் வெளியே சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். மேலும் கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.