சென்னைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் நிஷா தனது மகளுக்கு விமானப் பயணத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பகிர்ந்த பதிவொன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. கடந்த ஜனவரி 29, 2025 அன்று தனது மகள் துபாய் செல்ல இருந்த விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது குழந்தை தனது தாத்தா-பாட்டி மற்றும் குடும்பத்தினருடன் பயணம் செய்ய முயன்றதாகவும், ஆனால் பெற்றோர்கள் உடன் இல்லாததால் விமான நிறுவனத்தினர் அனுமதிக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார். முன்பு, குடும்பத்தினர் தங்களுடைய குழந்தைகளை துபாய்க்கு பெற்றோரின்றி அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், இப்போது துபாய் அரசு குழந்தைகள் பெற்றோர்கள் இல்லாமல் பயணம் செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இதனால் விமான நிலைய அதிகாரிகள், இந்த புதிய விதிமுறை இரண்டு மாதங்களுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர். குழந்தைகளை பெற்றோர் இல்லாமல் உறவினர்களுடன் விடுமுறைக்குப் பயணிக்க அனுமதிக்காத விதியை, பாதுகாப்பு காரணங்களால் கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது. நிஷாவின் குடும்பம் பயண முகவரிடம் கலந்தாலோசனை செய்தபோது, பெற்றோரின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால் பயணிக்க அனுமதி கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அனைத்து ஆவணங்களையும் வழங்கியும், விமான நிலைய அதிகாரிகள் குழந்தையை விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. பெற்றோர் அவருடன் பயணிக்க முடியாத சூழ்நிலை காரணமாக, குழந்தையின் முதல் சர்வதேச பயணம் முழுமையாக பாதிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் துபாயில் குழந்தைகள் பெற்றோரின்றி பயணிக்க கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்தியாவில், குழந்தைகள் பெற்றோரின்றி பயணிக்க வேண்டுமானால், அவர்களின் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஒப்புதல் கடிதம், மற்றும் பெற்றோர்களின் தொடர்பு விவரங்கள் ஆகியவை அவசியம். சில விமான நிறுவனங்கள் கூடுதல் ஆவணங்களை கோரலாம், இதில் மருத்துவ சான்றிதழ், போலீஸ் சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ், மற்றும் தேவையான விசா உள்ளிட்டவை அடங்கும். மேலும் குழந்தை கடத்தல்களை தடுக்கும் நோக்கில், 2024 ஜூன் 1 முதல் துபாய் அரசு, பெற்றோர்கள் இல்லாமல் பயணிக்கும் குழந்தைகளுக்கு முறையான அதிகாரப்பூர்வ அனுமதி ஆவணங்களை கொண்டுவர வேண்டும் என்று கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.