
சங்கரன்கோவில் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வரும் ராஜா ஆறுமுகம் மீது மது பாட்டிலால் தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பின்னர் திமுகவில் இணைந்தார்.
தற்போது தற்காலிக பேருந்து நிலையம் அருகே சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். அதே பகுதியில் அவரது தம்பி சங்கர் சிக்கன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் அந்த சிக்கன் கடைக்கு நான்கு பேர் மதுபோதையில் வந்து சிக்கன் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் பணம் செலுத்தாமல் செல்ல முயன்றதால் கடை உரிமையாளர் சங்கருக்கும், அந்த நால்வருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், சண்டையை சமாதானப்படுத்த ராஜா ஆறுமுகம் சென்றுள்ளார்.
ஆனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறி அந்த நால்வரும் கடையில் இருந்த பொருட்களை சூறையாடி, ராஜா ஆறுமுகத்தை மது பாட்டிலால் தாக்கியுள்ளனர். தலையில் படுகாயம் அடைந்த ராஜா ஆறுமுகம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தகராறு செய்த 4 போரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.