நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொது போக்குவரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை மாலி  தலைவர் மாரிமுத்து போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் நாகை  அவுரி திடலில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்துள்ளது.

இதில் சாலை விபத்துகளை தடுக்க வேண்டும். பொது போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களை ஊர்வலத்தில் கையில் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.டி அன்பழகன், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன் போன்ற பலர் கலந்து கொண்டனர்.