பாகிஸ்தானில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டின் வறுமை விகிதம் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 29 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமீபத்திய அதிகாரப்பூர்வ ஆய்வின்படி, சுமார் 7 கோடி மக்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறிப்பாக, கிராமப்புறங்களில் வறுமை 36.2 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 17.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் மானியங்கள் ரத்து செய்யப்பட்டது, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு, மற்றும் முன்னெப்போதும் இல்லாத பணவீக்கம் ஆகியவையே இத்தகைய அவல நிலைக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

மேலும் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அந்நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளதோடு, வேலையின்மை விகிதமும் 21 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. பாகிஸ்தான் அமைச்சரின் கூற்றுப்படி, 2018-19ல் 21.9 சதவீதமாக இருந்த வறுமை, தற்போது 28.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் மாகாணத்தில் வறுமை 47 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்துள்ள நிலையில், தற்போதைய பொருளாதாரச் சூழலில் இருந்து மீண்டு வர இன்னும் பல ஆண்டுகள் கடினமான சீர்திருத்தங்கள் தேவைப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.