இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த போரைத் தனது ஒற்றை மிரட்டல் மூலம் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அமைதி வாரியக் கூட்டத்தில் பேசிய அவர், 2025 மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சமடைந்தபோது, பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாகக் குறிப்பிட்டார்.

“நீங்கள் சண்டையை நிறுத்தவில்லை என்றால், உங்கள் நாடுகள் மீது 200 சதவீத வரி விதிப்பேன்” என்று மிரட்டியதாகவும், வர்த்தகப் பாதிப்பு மற்றும் பண இழப்பிற்குப் பயந்து இரு நாடுகளும் போரை கைவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2025 ஏப்ரலில் நடைபெற்ற பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த மோதலில் ஏற்கனவே 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், டிரம்பின் தலையீட்டிற்குப் பிறகு மே 9-ம் தேதி இரு நாடுகளும் அமைதி உடன்படிக்கைக்கு வந்தன.

“மோடியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், ஆனால் பணம் என்று வந்துவிட்டால் போர் செய்யும் எண்ணத்தை அனைவரும் கைவிட்டுவிடுவார்கள்” என்று டிரம்ப் இந்தப் பேச்சில் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.