பள்ளிக்கரணை அருகே நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகம் நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பேசிய போது, தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கை தலைவர்களாக ஓரிருவரை மட்டுமே வைத்திருப்பார்கள். அவர்களுடைய சிலையை மட்டும் தான் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் வைத்திருப்பார்கள். ஆனால் எங்கள் கட்சியில் தலைவர் விஜயின் அறிவுறுத்தலின்படி கொள்கை தலைவர்கள் அனைவருடைய சிலைகளும் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் இலக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல் தான். அதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம்.

நாங்களும் மக்களுடைய தேவையை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். 30 ஆண்டுகளுக்கு முன் விஜய் சினிமாவில் உச்சத்திற்கு வருவார், 2026 இல் இந்த இடத்தில் அவர் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்திலிருந்து மக்கள் சேவை செய்திருக்கிறார்கள். அப்படி உழைத்தவர்கள் தான் எங்களுடன் நிர்வாகிகளாகவும் தோழர்களாகவும் நிற்கின்றனர். அவர்களுக்கு தான் விஜய் மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்துள்ளார்.

அதை விட்டுவிட்டு அவர்களிடம் பணம் உள்ளதா அல்லது கார் உள்ளதா என்பதை பார்த்து நாங்கள் பதவி கொடுக்கவில்லை. யார் போஸ்டர் ஒட்டினார்களோ, யார் மக்களுக்கு சேவை செய்தார்களோ அவர்களுக்கு தான் பதவி வழங்கப்பட்டுள்ளது. சாதாரண கூலி தொழிலாளி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் என பலருக்கும் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்படி வேறு எந்த கட்சியிலும் பதவி வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.