மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேலியே பயிரை மெய்யும் நிகழ்வு எல்லாம் திமுக ஆட்சியில் தான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய முதல்வர் தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகின்றது. இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்கி விட முடியாது. 2 அணியாக அதிமுக இருந்தபோது சின்னம் முடக்கப்பட்டது. சின்னத்தை முடக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி நல்லதை செய்வதால் அவர் பின்னால் நாங்கள் நிற்கிறோம். 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி அமைக்க உள்ளார். அவருடைய செல்வாக்கை குறைக்கத்தான் இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. செங்கோட்டையன் கேட்காமலேயே காவல்துறை எதற்காக அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளது. திமுக பயத்தின் காரணமாகத்தான் செங்கோட்டையனுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது.

உறுதியாக, இறுதியாக சொல்கின்றேன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி அடைந்து மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். காவல்துறையை சுதந்திரமாக விட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வரலாம். குடும்பத்தில் அண்ணன் தம்பிக்குள் நடைபெறும் சண்டை போல அதிமுகவில் தற்போது பிரச்சனை நிலவுகிறது. அண்ணன் தம்பி சண்டைகள் சரியாவது போல அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளும் விரைவில் சரியாகிவிடும் என்று செல்லூர் ராஜு பேசியுள்ளார்.